உள்ளூர் செய்திகள்

கபடி போட்டி உடற்கல்வி ஆசிரியர்கள் கடும் வாக்குவாதம்

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி இறுதி போட்டியில் உடற்கல்வி ஆசிரியர்கள் இடையே கடும் வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி பள்ளி கல்வி துறை சார்பில், மாவட்ட அளவிலான கபடி போட்டி விளம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இறுதி போட்டியில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி - ஏர்வாய்ப்பட்டினம் விவேகானந்தா பள்ளி அணி மோதியது.போட்டியின் போது நடுவர் தவறாக புள்ளி வழங்கியதாக இரு அணியினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இரு அணியினரும் சமமான (9-9) புள்ளிகள் பெற்ற நிலையில், இறுதி போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து விளம்பார் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று மீண்டும் இறுதி போட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி அணியினர், ஏற்கனவே பெற்ற புள்ளி பட்டியலில் இருந்து போட்டியை துவங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு, விவேகானந்தா பள்ளி அணியினர் எதிர்ப்பு தெரிவித்து, முதலில் இருந்து போட்டியை துவங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் இரு அணியினரின் உடற்கல்வி ஆசிரியர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து, இறுதியாக அவரது ஆலோசனையின் படி கபடி போட்டி முதலில் இருந்து துவங்கி நடந்தது. அதில் ஏர்வாய்ப்பட்டினம் விவேகானந்தா பள்ளி அணியினர் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்