உள்ளூர் செய்திகள்

மருத்துவ தொழில் செய்வோர் பதிவு செய்வது கட்டாயம்

பல்லாரி: பல்லாரி நகரில் பல்வேறு இடங்களில் போலி டாக்டர்கள் நடத்தி வந்த கிளினிக்களுக்கு, சுகாதார அதிகாரிகள் பூட்டு போட்டனர்.இது தொடர்பாக பல்லாரி மாவட்ட சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:பல்லாரி நகரில் போலி டாக்டர்கள் கிளினிக் நடத்துவதாக, புகார் வந்தது. எனவே நேற்று (நேற்று முன்தினம்) ஜாக்ருதி நகர், கவாடி வீதி, பட்டு அலுவலகம் அருகில், சுகாதார அதிகாரிகள் சோதனையிட்டனர். நான்கு கிளினிக்குகளில் சோதனை நடத்தப்பட்டது.இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர்கள் கரீம், கோவிந்த், ஜாவித், ஷபனா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக தனியார் மருத்துவமனைகள் சட்டம் - 2007ன் படி, மருத்துவமனைகள், ஆய்வகங்கள் கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.முறைப்படி அனுமதி பெற்று செயல்பட வேண்டும். அனுமதி பெற்றிருக்காவிட்டால், உடனடியாக அனுமதி பெற வேண்டும். டாக்டர் அல்லாதோர், மருத்துவ தொழிலை செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப் பதிவாகும். மருத்துவ தொழில் செய்வோருக்கு, கட்டடத்தை வாடகைக்கு விடுவதற்கு முன், இவர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்ட பின், உரிமையாளர்கள் கட்டடத்தை வாடகைக்கு தர வேண்டும்.மருத்துவ பட்டப்படிப்பு படிக்காதவர்கள், கண்ட கண்ட மருந்துகளை கொடுப்பதால், நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உயிரைக் காப்பாற்றும் தொழிலை செய்வோர், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாமல் மருத்துவ தொழிலை செய்வது சட்டப்படி குற்றம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்