மைதானம் இல்லா அரசு பள்ளி மாணவியர் சாதனை
வாடிப்பட்டி: சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தொடர்ந்து மாநில தடகள போட்டிக்கு தேர்வாகி சாதித்து வருகின்றனர்.மைதான வசதி இல்லாத இப்பள்ளி மாணவிகள், அப்பகுதியில் உள்ள சிறிய காலி இடத்தில் பயிற்சி பெறுகின்றனர். மண்டல போட்டிகளில் வென்று, தொடர்ந்து 7வது ஆண்டாக தடகள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கடந்தாண்டு இப்பள்ளி மாணவி நாகலட்சுமி வட்டு எறிதலில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்தார்.இந்தாண்டு 14 வயது பிரிவில் பிரபா, 19 வயதில் சுவேதா, யோகஸ்ரீ, மித்ரா ஆகியோர் ஈட்டி, வட்டு, குண்டு எறிதல் போட்டிகளில் தகுதி பெற்றனர். இம்மாத இறுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், கிராம மக்கள் பாராட்டினர்.