மாணவர்களை அடைத்து வைத்து கொடுமை; அதிகாரிகள் விசாரணை
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அரசு கள்ளர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மீதமுள்ள உணவை கீழே கொட்டியதாக கூறி அவர்களை விடுதிக்குள் பூட்டி வைத்து காப்பாளர் கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகாரில் சைல்டு லைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கம்பம் அருகே கோசேந்திர ஒடை என்ற இடத்தில் அரசு கள்ளர் சீரமைப்பு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 10 மாணவர்கள் தங்கி பள்ளிகளில் படித்து வருகின்றனர். விடுதியில் சமையலர், காவலர் என எந்த பணியிடமும் இல்லை. காப்பாளர் மட்டும் உள்ளார். அவர் தனது வீட்டில் சமையல் செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.நவ.3 காலை உணவு சாப்பிட்டது போது எஞ்சியதை மாணவர்கள் கீழே கொட்டியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த விடுதி காப்பாளர் சத்தியேந்திரன், சாப்பாட்டை கீழே கொட்டியதால் மாணவர்களை விடுதிக்குள் வைத்து பூட்டி விட்டு சென்றார். விடுதி மாணவர்கள் பள்ளிக்கு வராததை அறிந்த ஆசிரியர்கள் காப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டனர். அதன்பின் மதியம் அடைத்து வைக்கப்பட்ட மாணவர்களை விடுவித்து பள்ளிக்கு அனுப்பினார்.இப் பிரச்னையில் பயந்த சில மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் புகார் கூறினர். பெற்றோர் ஒருவர் அலைபேசியில் சைல்டு லைனுக்கு தகவல் கூறியுள்ளார். அதிகாரிகள் அங்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக தேனி சைல்டு லைன் அலுவலர் ராஜேஷிடம் கேட்டதற்கு, மீதமுள்ள உணவை கீழே கொட்டிய மாணவர்களை அறைக்குள் வைத்து விடுதி காப்பாளர் பூட்டியுள்ளார். மாணவர்களை பயமுறுத்த இவ்வாறு செய்ததாகவும், அதுவும் 10 நிமிடங்களில் திறந்து விட்டதாகவும் காப்பாளரிடம் விசாரித்த போது தெரிவித்தார். எங்களது அறிக்கையை கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குநருக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.மாணவர்கள் கூறுகையில், எங்களை விடுதிக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றார். குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் இருந்தால் தான் உங்களுக்கு புத்தி வரும். பாத்ரூம் தண்ணீரை குடிங்கள் என்று கூறி சென்றார் என்றனர். இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக விடுதி காப்பாளர் சத்தியேந்திரனை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் பதிலளிக்கவில்லை.