ஈவ் டீசிங்: போலீசார் கண்காணிக்க பெற்றோர் கோரிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சுற்றிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்தோர் வெளியூர் செல்ல, காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் வந்துதான் செல்ல வேண்டும்.இதில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரும் கிராமத்திற்கு செல்ல, மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இவர்களை பார்க்கவும், தொல்லை கொடுக்கவும் ஏராளமான இளைஞர்கள், அங்குள்ள டீ கடைகளில் முகாமிட்டு, ஆபாச சைகை செய்வது, கிண்டல் அடிப்பது, மொபைல் நம்பர் கேட்பது, மாணவியருக்கு தெரியாமல் மொபைல் போனில் வீடியோ, போட்டோ எடுப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட பள்ளி, கல்லுாரி மாணவியர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தங்களுக்கு, வருமானம் வந்தால் போதும் என, டீக்கடைக்காரர்களும் எதையும் கண்டு கொள்வதில்லை.இவ்வாறு காத்திருக்கும் இளைஞர்களுக்குள், மாணவியரை பார்ப்பதில் போட்டி ஏற்பட்டு கோஷ்டி மோதலும் உருவாகிறது. இதனால் பெற்றோர்களும், மாணவியரை பள்ளிக்கு அனுப்புவதில் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.இது குறித்து, மாணவியரின் பெற்றோர் கூறுகையில், பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு, இங்கு வரும் இளைஞர்கள் பலர், பல வகையிலும் தொந்தரவு கொடுக்கின்றனர். இதனால், வீட்டிற்கு வரும் மாணவியர், பாடம் படிப்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை.எனவே, போலீசார் காலை, மாலை நேரங்களில் மாணவியர் செல்லும் வரை, ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அவசியமின்றி பஸ் ஸ்டாண்டிற்கு வரும் இளைஞர்களை பிடித்து, வழக்குப்பதிய வேண்டும். மேலும், பஸ் ஸ்டாண்டில் போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தி, தினமும் கண்காணிக்க வேண்டும் என்றனர்.