தஞ்சை சரஸ்வதி மஹாலுக்கு ஆர்வம் காட்டாத அலுவலர்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகம், ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்று. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நுாலகத்திற்கு முழு நேர இயக்குனர் பணி காலியாக இருப்பதால், அப்பணியை கலெக்டர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். அவர்களின் பணிச்சுமையால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.வருவாய்த் துறையை சேர்ந்த டி.ஆர்.ஓ.,க்கள், நிர்வாக அலுவலர் பணியை கூடுதலாக கவனித்து வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு முதல், கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர் தகுதியில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களும் பணியை சரிவர கவனிக்காமல் விட்டு விட்டதால், நுாலகத்தின் வளர்ச்சி வெகுவாக பாதித்துள்ளது.இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:நுாலகத்திற்கு பள்ளிக் கல்வித்துறையில், டி.இ.ஓ., மற்றும் சி.இ.ஓ., தகுதியில் உள்ளவர்கள் நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். சரஸ்வதி மஹால் நுாலக நிர்வாக அலுவலர் பதவி, பொம்மை போன்றது. பெரிய வருமானம் இருக்காது என்பதால், அவர்கள் பணியில் இருக்க ஆர்வம் காட்டுவது கிடையாது.இதனால், பெரும்பாலும் மூன்று மாதங்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இந்த ஆண்டு மட்டுமே மூன்று நிர்வாக அலுவலர்கள் மாறியுள்ளனர். இதனால், நுாலக வளர்ச்சிக்கான ஆவணங்கள், நிர்வாக அலுவலர் கையெழுத்து இல்லாமல் தேங்கியுள்ளன. எனவே, முழு நேர இயக்குனர், நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.சமூக நல ஆர்வலர்கள் அமைப்பின் துணைத்தலைவர் வக்கீல் ஜீவக்குமார், முழு நேர இயக்குனரையும், தகுதியான நிர்வாக அலுவலரையும் நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளேன் என்றார்.