ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் அசத்தும் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி
கரூரிலிருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு படிக்கும், 150 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் போர்ட், புரஜெக்டர், எல்.இ.டி. டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட், ஆன்ராய்டு மொபைல் போன்றவற்றை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து, ஸ்மார்ட் தொழில்நுட்பம் மூலம் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் வாசுகி கூறியதாவது: ஸ்மார்ட் வகுப்பறையில், மாணவர்கள் ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுகிறது. மெதுவாக கற்கும் மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, ஸ்மார்ட் போர்டு மூலம் பாடங்களை எளிமையான விளக்கங்களுடன் கற்பிக்க முடிகிறது. மைக்ரோசாப்ட் மென்பொருள், யுடியூப் வீடியோக்களை பயன்படுத்தி வருகிறோம். மாணவர்களின் வாசிப்புத் திறனை உயர்த்தியுள்ளோம். ஸ்மார்ட் போர்ட் எனது கற்பித்தலை எளிமையாக்கியுள்ளது.இதுமட்டுமின்றி செல்லப் பெயர் சூட்டி மரம் வளர்த்தல், பள்ளித் தோட்டம் அமைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக பல்வேறு பாராட்டு சான்று பெற்று இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.