விடுதி மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்கிய இன்ஸ்பெக்டர்
ராய்ச்சூர்: வார்டனின் அலட்சியத்தால், பசியால் வாடிய விடுதி மாணவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உணவு சமைத்து கொடுத்து, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்.ராய்ச்சூரின் ஹட்டியில் கர்நாடகா அரசின் சமூக நலத்துறை விடுதி உள்ளது. இந்த விடுதியில் 20 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, மாணவர்களுக்கு உணவு சமைத்து வைக்காமல், விடுதியின் சமையல் ஊழியர்களும், வார்டன் பிரகாஷும் வெளியே சென்று விட்டனர். பசியால் வாடிய மாணவர்கள், வார்டனை மொபைல் போனில் அழைத்து பேசியுள்ளனர். ஆனால் அவர் சரியாக பதில் சொல்லவில்லை.மாணவர் ஒருவர், ஹட்டி போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு, வார்டனின் அலட்சியம் பற்றி புகார் செய்தார். வார்டன் பிரகாஷிடம், ஹட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹோஸ்கரப்பாவும் பேசினார். அப்போதும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.இதையடுத்து ஹோஸ்கரப்பாவே, பெரிய பாத்திரத்தில் உணவு சமைத்தார். அந்த உணவை விடுதிக்கு கொண்டு வந்து, மாணவர்களுக்கு பரிமாறினார். மனித நேயத்துடன் செயல்பட்ட அவரை, பொதுமக்கள் பாராட்டினர். வார்டன், சமையல் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.