உயர்கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றம்: கேரள முதல்வர் உறுதி
பாலக்காடு: உயர்கல்வித் துறையில் காலத்திற்கேற்ற மாற்றங்களும், வளர்ச்சியும் கொண்டு வருவதற்கான முயற்சியில் அரசு முழுக்கவனம் செலுத்துகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.கேரள மாநிலத்தில் முதல்வரும், அமைச்சர்களும், 140 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று, மக்களிடம் உரையாடி வருகின்றனர். நவ கேரள சதஸ் என்ற பெயரில், காசர்கோட்டில் இந்த நிகழ்ச்சி துவங்கியது. ஐந்து மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக்கு பின், நேற்று காலை பாலக்காடு மாவட்டம் சொர்ணுார் தொகுதியில் உள்ள குளப்புள்ளியில் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, நிருபர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: உயர்கல்வித் துறையில் காலத்திற்கேற்ற மாற்றங்களும், வளர்ச்சியும் கொண்டு வருவதற்கான முயற்சியில் அரசு முழுக்கவனம் செலுத்துகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் வகுப்புவாத சக்திகள், பல்கலைக்கழகங்களில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன. பாடத் திட்டத்தில் வெறுப்பு சித்தாந்தத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. அதில் இருந்து கேரளா தனித்து நிற்கிறது. கேரளாவின் நற்பெயரை அழித்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதில் ஆர்வமுடன் உள்ளனர். அவர்களின் நோக்கம் ஒரு போதும் நிறைவேறாது.ஐந்து மாவட்டங்களில் நடந்த மக்கள் உரையாடல் நிகழ்வில், 80 ஆயிரத்து 885 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து, மக்களின் பிரச்னைகள் அனைத்தும் களையப்படும். அதற்கான முயற்சியே, இந்த திட்டத்தின் நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார்.