உள்ளூர் செய்திகள்

அறிவிக்கப்பட்ட சலுகையை விரைவில் வழங்கணும்! சிறப்பாசிரியர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: அறிவிக்கப்பட்ட சலுகையை விரைவில் வழங்க வேண்டும் என, சிறப்பாசிரியர்கள் எதிர்பர்க்கின்றனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த, 2012ல், மாநிலம் முழுக்க உள்ள மாநகராட்சி, அரசுப்பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 16 ஆயிரத்து 549 பேர் நியமிக்கப்பட்டனர். மாதம், 12 அரை நாட்கள் மட்டுமே இவர்களுக்கு பணி என்ற அடிப்படையில், மாதம், 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, 10 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். பலர், சம்பளம் குறைவு என்பதால், வேறு பணிக்கு சென்று விட்டனர்; சிலர் வயது முதிர்வு காரணமாக இறந்தும் விட்டனர்.இருப்பினும், எப்படியும் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில், 12 ஆயிரம் பேர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 300 பேர் பணிபுரிகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர். கடந்த, 2019 லோக்சபா தேர்தல் மற்றும், 2021 சட்டசபை தேர்தலில், 10 ஆண்டுகள் பணியாற்றி வரும் அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கும், காலமுறை ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை தி.மு.க., வழங்கியது.ஆனால், ஆட்சி அமைத்தும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கேட்டு பலகட்ட போராட்டம் நடத்தியும் பலனில்லை. சில மாதம் முன்பு, டி.பி.ஐ., வளாகத்தில் குடும்பத்துடன் காலவரையற்ற உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதன் விளைவாகவும், பல அரசியல் கட்சியினர் ஆசிரியர்களின் கோரிக்கையை வலியுறுத்தியதன் விளைவாகவும், 2,500 ரூபாய் சம்பள உயர்வு; அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்று வரை, அமலுக்கு வரவில்லை.சிறப்பாசிரியர் சங்கத்தின் சார்பில் இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்ட நிலையில், அரசின் அறிவிப்பு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது; நிதித்துறை ஒப்புதல் கிடைத்ததும், ஊதிய உயர்வு வழங்கப்படும் என சமாளித்துள்ளார். இதனால், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, அரசின் அறிவிப்பை விரைவில் அமல்படுத்த வேண்டும் என, சிறப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்