பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி
ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேன் சுடர் பெண்கள் இயக்கம் சார்பில், குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இயக்க பொருளாளர் பாண்டீஸ்வரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.மகேஷ் வரவேற்றார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட பணியாளர் மகேஷ் குழந்தை திருமண தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேன் சுடர் பெண்கள் இயக்க முதன்மை செயலாக்க அலுவலர் அமுதா, குழந்தைகளின் பிரச்சனைகளை அணுகுதல் மற்றும் வழிகாட்டுதலில் தேன் சுடர் பெண்கள் இயக்கத்தின் பங்கு குறித்து பேசினார். குழந்தைகளின் உரிமைகள் குறித்து ஆரோக்கிய அகம் குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரிகா பேசினார். குழந்தைகள் தங்களுக்கு எந்த பிரச்னைகள் என்றாலும் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்வோம் என உறுதிமொழி எடுத்தனர். முகாமில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.