தனியார் பள்ளியை மிஞ்சும் ஆலுார் அரசுப் பள்ளி
திருக்கோவிலுார்: ஆலுார் அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக ஸ்மார்ட் கிளாஸ், திறனறித் தேர்வு, விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களில் முன்னிலை வகிக்கிறது.ஆலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 190 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் செல்வகுமார். ஐந்து உதவி ஆசிரியர்கள், 3 தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் கிளாஸ், ஆன்லைன் வகுப்பறை, நுாலகம் மட்டுமல்லாது மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு, சிலம்பம் உள்ளிட்ட கலைகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.இதன் காரணமாக தேசியஅளவிலான திறனறித் தேர்வில் 9 மாணவர்கள் தேர்வாகி மத்திய அரசின்மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பெற்று பள்ளிப் படிப்பு, உயர் படிப்புகளை தொடர்ந்து வருகின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கபடி, வாலிபால், தடகளம் உள்ளிட்ட பயிற்சிக்காக 4 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசு செலவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இப்பள்ளி பெற்றுள்ளது.இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமார் கூறுகையில், அரசு பள்ளி என்பது அடித்தட்டு மாணவர்களை உயர்நிலைக்கு கொண்டு வர எங்கள் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்தை பயன்படுத்தி பயிற்றுவிக்கின்றனர். இதன் மூலம் எங்கள் மாணவர்கள், தனியார் பள்ளியை மிஞ்சிய கல்வித் திறனை பெறுகின்றனர் என்றார்.