பள்ளி ஆசிரியைக்கு மாணவர்கள் தங்க நகை பரிசு
தட்சிணகன்னடா: அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியையின் சேவையை பாராட்டி, மாணவர்கள் தங்க நகை பரிசளித்தனர்.தட்சிண கன்னடா, பண்ட்வாலின், பாணி மங்களூரின், அக்கரங்கடி கிராமத்தில் தாருல் இஸ்லாம் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் ஜெயலட்சுமி பட் என்பவர், 28 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றினார். 2020ல் ஓய்வு பெற்றார்.ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்ததால், அவர் அதே பள்ளியில் ஊதியம் பெறாமல் ஆசிரியையாக பணியை தொடர்ந்தார். 31 ஆண்டுகளாக பணியாற்றிய அவர், சிறந்த மாணவர்களை உருவாக்கி, அனைவருக்கும் பிடித்தமானவராக இருந்தார்.தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த, இன்னாள், முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டனர். அவருக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசு வழங்க விரும்பினர். முன்னாள் மாணவர்கள், வாட்ஸாப் குரூப்பில் ஆலோசனை நடத்தினர்.தாங்களே பணம் திரட்டி, 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ், கம்மல் வாங்கினர். இதை ரகசியமாக வைத்திருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளி ஆண்டு விழா நடந்தது.இதில் ஆசிரியை ஜெயலட்சுமியை கவுரவித்து, பரிசளித்தனர். மாணவர்கள் தனக்கு தங்க நகை பரிசளித்ததை கண்டு, ஆசிரியை இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.