ஐ.ஐ.டி., இன்ஜி., படிப்பில் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:பிளஸ் 2 முடித்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், விளையாட்டு வீரர்களாக இருந்தால், அவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து அறிமுகமாகிறது.வாய்ப்புகள் உண்டுஐ.ஐ.டி.,க்களில் முதன்முறையாக, சென்னை ஐ.ஐ.டி.,யில் தான் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் விளையாட்டு அனுபவங்களுடன், அதற்கேற்ற தொழில்நுட்பத்தையும் சேர்த்து படித்தால், வரும் காலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.இதனை கருத்தில் கொண்டு, விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு முதல் முறையாக அமல்படுத்தப்படுகிறது.இந்த ஒதுக்கீட்டை பெற விரும்பும் மாணவர்கள், ஜே.இ.இ., மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இந்த கல்வித்தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதிலுள்ள முன்னணி தர வரிசை அடிப்படையில், மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.தரவரிசைப் பட்டியல்தேசிய அளவில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்த விளையாட்டுகளில், தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, விளையாட்டு பிரிவுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல், விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு அமலுக்கு வரும்.இளநிலை பட்டப்படிப்பின் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், தலா இரு இடங்கள் ஒதுக்கப்படும். அதில், ஒரு இடம் பெண்களுக்கு வழங்கப்படும். இந்த சேர்க்கை நடைமுறை, ஐ.ஐ.டி.,யன் ஒருங்கிணைந்த ஆன்லைன் முறையில் இல்லாமல், சென்னை ஐ.ஐ.டி., வழியே தனியாக நடத்தப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.விளையாட்டு தொழில்நுட்ப மையம்விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு குறித்து, ஐ.ஐ.டி.,யின் பெருநிறுவன தொடர்பு துறை பேராசிரியர் மகேஷ் பஞ்ச்குலா கூறியதாவது:விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சி மையம் என்ற புதிய மையம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், விளையாட்டு போட்டிகள், விளையாட்டு உபகரணம் தயாரிப்பு நிறுவனங்கள், விளையாட்டு வீரர்களுக்கான உடல்நலன் பேணுதல் போன்ற அனைத்துக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் புள்ளி விபரங்களை, இந்த மையத்தின் வழியே ஆராய்ச்சி செய்ய உள்ளோம்.அத்துடன், சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிதாக சேர உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு போட்டிகளில் தங்களை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். விளையாட்டு துறைகளில், தொழில்நுட்பத்தை ஏற்படுத்தவும் இந்த மாணவர்களுக்கு, உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.