தேர்வில் வென்ற மாணவர்கள் சென்னைக்கு விமான பயணம்
உடுமலை: தேசிய வருவாய் வழி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அவர்களை விமானத்தில் அழைத்துச்சென்றனர்.உடுமலை கிளுவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பாண்டின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு முடிவுகள், சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்குவிப்பதற்கு தேர்வில் வெற்றி பெறுவோரை, விமானத்தில் அழைத்துச்செல்வதாக உறுதி அளித்தனர்.இதன்படி, இத்தேர்வில் இப்பள்ளியைச்சேர்ந்த லாவண்யா, தீபிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இப்பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதேவி, இந்துமதி, தங்களின் சொந்த செலவில் வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரையும், விமானப்பயணமாக சென்னை அழைத்துச்சென்று வந்தனர்.இந்த நிகழ்வால், பெற்றோரும் கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். மாணவர்களை ஊக்குவிப்பதற்கான ஆசிரியர்களின் செயல், மற்ற பள்ளிகளுக்கும் முன்மாதிரியாகி உள்ளது.