கல்லுாரிகளில் முன்கூட்டியே அட்மிஷன் துவங்கியதாக புகார்
கோவை: அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நடப்பாண்டில் ஒற்றை சாளர முறை சேர்க்கை செயல்படுத்தப்படவுள்ள சூழலில், ஒரு சில கல்லுாரிகள் சேர்க்கை செயல்பாடுகளை முன்கூட்டியே துவக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.அரசு கல்லுாரிகளில் கடந்தாண்டு ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நடப்பாண்டில், அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளிலும்சேர்க்கை நடைமுறை மாற்றப்படவுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால், கல்லுாரி கல்வி இயக்குனரகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாவதில் தாமதம் நிலவுகிறது. இதுகுறித்த கூட்டம் அரசு உதவிபெறும் கல்லுாரி முதல்வர்களுக்கு நடத்தப்பட்டது.உயர்கல்வித்துறையில் இருந்து, உரிய அறிவிப்பு வெளிவராத நிலையிலும், பிளஸ் 2 முடிவுகள் இதுவரை வெளியிடாத சூழலிலும் பல கல்லுாரிகள் அட்மிஷன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை ஆசிரியர் சங்கம் முன்வைத்த புகாரின் அடிப்படையில், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட அரசு உதவிபெறும் கல்லுாரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.