உள்ளூர் செய்திகள்

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதி இல்லை!

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடலின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய 'பெட்' ஸ்கேன் வசதியை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைக்கின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கடந்த 2012 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளாக 800க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு பெரும்பாலும் கர்ப்பிணிகள், வயிற்று வலி பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள், குடல் வால்வு, சிறுநீர்ப்பை, மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளை கண்டறிவதற்கு தினசரி 60க்கும் மேற்பட்டோருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது.சில நோயாளிகளுக்கு உடலில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. இவற்றின் மூலம் உடலில் கட்டி இருப்பது தெரியும். அதேபோல் சி.டி.அல்லது எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் உடல் உறுப்புகளின் அளவு, வடிவம், மாறுபாடுகள் மற்றும் குறைபாடு தெரியும். ஆனால் அந்த உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் தெரிந்துகொள்ள முடியாது.ஆனால் பெட் ஸ்கேனில் முக்கிய உடல் உறுப்புகளின் தோற்றத்தைக் காண்பதுடன் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிய முடியும். அந்த உறுப்புகளில் கட்டி உள்ளதா, ரத்தம் ஓட்டம் சரியாக உள்ளதா, செல்களில் ஆக்ஸிஜன் கிரகிக்கப்படுகிறதா, செல்களுக்குள் குளுக்கோஸ் சென்று பயனடைகிறதா என்பது போன்ற விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் புற்றுநோய்களையும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க இந்த ஸ்கேன் பயன்படுகிறது.இந்த பெட் ஸ்கேன் வசதி சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கிடையாது. புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ள நபர்கள் இந்த ஸ்கேன் எடுப்பதற்கு மதுரைக்கு செல்லவேண்டியுள்ளது. மருத்துவக் கல்லுாரி துவங்கி 12 ஆண்டு முடிவடைந்த நிலையில் மாவட்ட மக்கள் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதால் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்