கோடையில் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கை கல்வித்துறை அறிவுரை
உடுமலை: கோடை வெப்ப பாதிப்புகளிலிருந்து, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற, பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.பள்ளிகல்வித்துறையின் சார்பில், அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டிய கோடை பாதுகாப்பு நடவடிக்கைகள், நோய்த்தடுப்புகள், உடல்நலத்தில் கவனம் செலுத்துவதற்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஏப்., முதல் கோடை வெப்பம் அதிகரிக்க துவங்குகிறது. பருவநிலை மாற்றத்தால், பல்வேறு நோய் தாக்குதல்களும் உண்டாகின்றன. அதிக வெப்பம் உள்ள, 12:00 முதல் 3:00 மணிவரை நேரடியாக வெயில்படும் வகையில் திறந்த வெளியை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.தேவையான அளவு தண்ணீர் அருந்துவதற்கு, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர்களுக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க அறிவுறுத்துவதோடு, கண்காணிக்க வேண்டும். உணவு வகைகளில் கவனம் செலுத்தி, நீர்ச்சத்து நிறைந்த பழவகைகளை உட்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.பள்ளிகளில் தேவையான அளவு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்டுகள், முதலுதவி பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு உள்அரங்க விளையாட்டுகளை விளையாடுவதற்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும்.மரம்வளர்ப்பு, பள்ளி வளாகத்தில் பறவைகளுக்கு நீர் வைப்பதை மாணவர்களிடம் ஊக்கப்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் வாயிலாக, பொதுமக்கள், பெற்றோரிடமும் வெப்ப தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.வெப்ப நோய்கள் அவற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள், நோய்தாக்குதலுக்கான அறிகுறிகள், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும். மாணவர்களுக்கு தட்டம்மை உட்பட அம்மை நோய்கள், சளி காய்ச்சல் உள்ள பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, பள்ளிக்கல்வித்துறை பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.