நுாற்றாண்டு நுாலகம்: குப்பையால் கிடைத்த படிப்பினை
மதுரை: மதுரையில் மே 19 அன்று பெய்த கனமழையால் கலைஞர் நுற்றாண்டு நுாலகத்திற்குள் மழைநீர் புகுந்தது. முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.இந்நுாலகத்தை கடந்த ஜூலை 15ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை பராமரிக்கிறது. மே 19ல் பெய்த கனமழையால் நுாலகத்தின் தரைத் தளத்தில் மழைநீர் புகுந்ததால் மாற்றுத் திறனாளிகள் பிரிவு, கலைக்கூடத்தில் இருந்தவர்கள் சிரமப்பட்டனர்.நுாலகர் கிருஷ்ணன் கூறியதாவது:மழைநீர் வடிகாலில் பேப்பர் உள்ளிட்ட குப்பை அடைத்துக்கொண்டதால் மழைநீர் நிரம்பி வழிந்து தரைதளத்தில் தேங்கியது. 2 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது.தரைதளத்தில் புத்தகங்களே கிடையாது என்பதால் பாதிப்பில்லை. தற்போது நடக்கும் புத்தக கண்காட்சி ஸ்டால்களை துணியால் மூடிவிட்டு இரவு செல்வர். அதை தவறாக புரிந்துக்கொண்டு புத்தகங்கள் நனைந்துள்ளதாக செய்தி பரப்பினர் என்றார்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்துாரன் கூறியதாவது:மேல் தளத்திலிருந்து குழாய் மூலம் வரும் மழைநீர் தரைத் தளத்தில் உள்ள வடிகால் தொட்டியில் விழுந்து கால்வாயை அடையும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த தொட்டிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் தரைத் தளத்தில் தேங்கியது. இதையடுத்து மழைநீர், தொட்டிக்குள் விழாமல் நேரடியாக நுாலகத்தின் வெளிப்புறத்தில் வெளியேறும் வகையில் கட்டமைப்பும் மாற்றப்பட்டது. வடிகால் குழாயும் பெரிதாக்கப்பட்டுள்ளது. எனவே மழைநீர் தேங்க இனி வாய்ப்பே இல்லை என்றார்.பொதுப்பணித்துறை முறையாக பராமரித்திருந்தால் நுாலகத்திற்குள் மழைநீர் வருவதை தடுத்திருக்கலாம் என நுாலக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.