மாணவர்களுக்கு இலவச சீருடை தைக்கும் பணி தீவிரம்
விழுப்புரம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 6ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சீருடைகள் தைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் ஒவ்வொரு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் வழங்கும் திட்டம் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த துறையின் கீழ், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சீருடைகள் 4 செட் வழங்கப்பட்டு வருகிறது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் விடப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசின் பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.இதையொட்டி, அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், மாணவர்கள் அமரும் இருக்கைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் கழிவறைகள் துாய்மைபடுத்தும் பணிகள் நடக்கிறது.இந்நிலையில், சமூக நலத்துறையின் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்குவதற்கான பணிகள் விழுப்புரம் மாவட்டத்தில் முழு வீச்சில் நடக்கிறது.நடப்பு 2024-25ம் கல்வியாண்டு இலவச சீருடை வழங்கும் பிரிவின் கீழ், 12 வட்டார கல்வி அலுவலகங்கள், 2 மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு இலவச சீருடைகள் வழங்குவதற்காக துணிகள் பண்டல்களாக, விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் கடந்த சில தினங்களுக்கு முன் வந்திறங்கியது.இந்த துணிகள் பிரிக்கப்பட்டு லாரிகள் மூலம், விழுப்புரத்தில் உள்ள மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த சங்கத்தில் உள்ள 1,082 உறுப்பினர்கள் மூலம் சீருடைகள் தைக்கப்பட்டு பிரித்து வழங்கப்பட்டு, 1,508 அரசு பள்ளிகளுக்கு இலவச சீருடை விநியோகம் செய்யப்பட உள்ளது.இதன் மூலம் மாவட்டத்தில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் ஒரு லட்சத்து 5,361 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளான வரும் ஜூன் 6ம் தேதி முதற்கட்டமாக ஒரு செட் இலவச சீருடை வழங்குவதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.