நாய்த்தொல்லை குழந்தைகளை வெளியில் அனுப்ப அஞ்சும் பெற்றோர்
விருதுநகர்: விருதுநகரில் தீராத தலைவலியாய் நாய்த்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகளை வெளியில் அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர்.விருதுநகர் நகராட்சி 36 வார்டுகளிலும் நாய்த்தொல்லை பரவலாக உள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் நாய்கள் தெருமுனைகளில் ஒன்று கூடி நின்று செல்வோரை துரத்துகின்றன. 10 நாய்கள் ஒன்று கூடி நின்றால் அதில் ஒரு நாயாவது வெறி நாய் போல நடந்து கொள்கிறது. அந்த நாய் பிற நாய்களை தாக்குவதுடன், அதன் மூலம் மற்ற நாய்களுக்கும் நோய் தொற்று பரவுகிறது. இவை அவ்வழியாக சைக்களில் வரும் சிறுவர்களை விடாது துரத்துகின்றன. பெண்கள் நடமாட முடிவதில்லை. நகர் முழுவதும் இந்த பிரச்னை உள்ளது. குறிப்பாக மதுரை ரோட்டில் அதிகளவில் உள்ளது.பள்ளிகள் திறந்துள்ள நிலையில் மாணவர்களை மாலை டியூசன் அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர். மாவட்டத்திலே நரிக்குடி, ராஜபாளையம், விருதுநகர் பரங்கிநாதபரம், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார் என பல பகுதிகளில் நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி, சிகிச்சை செய்ததால் பெரிய அளவில் பாதிப்பில்லை. ஆனால் சிறிய குழந்தைகள், சிறுவர்களுக்கு இது தெரியாது. பெற்றோரிடம் கூறாமல் விட்டு விட்டால் இது உயிரிழப்பையே ஏற்படுத்தும். விருதுநகர் நகராட்சி பகுதியில் நாய்த்தொல்லையை கட்டுப்படுத்த வரும் நகராட்சி கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டும்.