உள்ளூர் செய்திகள்

பிறமொழி மாணவர்களும் தமிழ் கற்க புது சேனல்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், கடந்த மாதம் 29ம் தேதி, டில்லியில் அகில இந்திய கல்வி மாநாடு நடந்தது.அதில், கல்வியை மாநில மொழிகளின் வாயிலாக பரவலாக்கவும், மாணவர்களுக்கு பல்துறை அறிவும், பன்மொழி திறமையும், நாட்டின் வேறுபட்ட கலாசார புரிதலும் ஏற்படும் வகையில், புதிய டி.டி.எச்., சேனல் துவக்குவது குறித்து திட்டமிடப்பட்டது.இந்நிலையில், தமிழ் மொழி, பாரம்பரியம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்களை தயாரிக்க, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதன் வாயிலாக, தமிழ் மொழி, இலக்கியம், சித்த மருத்துவம், கல்வெட்டுகள், வர்மக்கலை, யோகம் உள்ளிட்டவை குறித்து, பேச்சு, உரைநடை, நாடகம், பாட்டு வடிவிலான வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.இவை, தமிழில் இருந்தால், ஆங்கிலம், ஹிந்தி மொழி உபதலைப்புகளுடனும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தமிழ் நிகழ்ச்சிகள், டி.டி.எச்.,சின், 34வது சேனலில் ஒளிபரப்பப்படுகின்றன.இதுகுறித்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:டி.டி.எச்., 34வது சேனலில் ஒளிபரப்ப, பொங்கல் விழா, சோழர்களின் கலைகள், கட்டடக்கலை, தமிழகத்தில் பக்தி இயக்கங்கள், பரதம்.நாட்டுப்புற கதைகள், கலைகள், கோட்டைகள், குடைவரை கோவில்கள், தமிழின் எழுத்து வளர்ச்சி, ஜல்லிக்கட்டு, பாரம்பரிய விளையாட்டுகள், தமிழக கோவில்கள் உள்ளிட்ட 100 தலைப்புகளில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க உள்ளோம்.தற்போது, தமிழ் நிகழ்ச்சிகள், www.youtube.com/live/LhCBM8TJ9kg?si= UukYRh_QsQ4xdaSq என்ற இணைய இணைப்பில் ஒளிபரப்பாகின்றன. இது, ஆங்கிலம், ஹிந்தி வழியில், தமிழ் தெரியாத மாணவர்களுக்கும் தமிழகம், தமிழர், தமிழ் மொழியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்