உள்ளூர் செய்திகள்

லேட்டாக வந்ததால் பனிஷ்மென்ட்: பள்ளியை சூறையாடிய மாணவியர்

போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற கடும் தண்டனைகளை வழங்கிய பெண் நிர்வாகியை கண்டித்து, பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சேதப்படுத்தி, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, பள்ளி நிர்வாகியை நீக்கி மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மத்திய பிரதேசத்தின் போபாலில் சரோஜினி நாயுடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை, ஆயுதப்படையின் முன்னாள் கேப்டன் வர்ஷா ஷா என்பவர் நிர்வகித்து வந்தார்.இவர், பள்ளிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வரும் மாணவியரை, மைதானத்தில் உள்ள புற்களை பிடுங்கச் சொல்வது, வெயிலில் நிற்க வைப்பது, கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்வது போன்ற தண்டனைகள் அளித்துள்ளார்.இவரது கடும் தண்டனைகளுக்கு உள்ளான மாணவியர் பலர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால், பள்ளி நிர்வாகி வர்ஷா ஷா மீது, மாணவியர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளியின் முன், மாணவியர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, பள்ளி நிர்வாகி வர்ஷா ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு, பள்ளி வளாகத்திற்குள் சென்று அவரது பெயர் பலகையை வீசி எறிந்தனர். அத்துடன், வகுப்பறை கதவுகள், ஜன்னல்கள், மின் விசிறிகள், மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.இதனால், பள்ளி வளாகம் முழுதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை சமரசம் செய்தனர். அப்போது அவர்கள், தங்கள் பள்ளியில் கழிப்பறை மோசமான நிலையில் இருப்பதாகவும், உரிய குடிநீர் வசதிகளும் செய்து தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.மாணவியரின் கோரிக்கைகள், அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என போலீசார் உறுதியளித்த நிலையில், அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே, மாணவியரின் போராட்டம் எதிரொலியாக பள்ளி நிர்வாகி வர்ஷா ஷாவை நீக்கி, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்