உள்ளூர் செய்திகள்

மாணவர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்க்கு தடை

சென்னை: மதுரை மாடக்குளத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியின் வார்டன் தற்காலிக பணி நீக்கத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சங்கரசபாபதி; இவர், மதுரை மாடக்குளத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியின் வார்டனாக உள்ளார்.இவர் தாக்கல் செய்த மனு:ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். பழங்குடியினர் நலப்பள்ளிகளில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.கடந்த 2017ல் நியமிக்கப்பட்ட, 300க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள், பணி விலகல் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றினர். அவர்களை, கடந்த ஜூனில் பணியாற்ற விடாமல் தடுத்தனர்.இதையடுத்து, சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலையில், ஜூன் 30ல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். நிர்வாகி என்ற முறையில் நான் பங்கேற்றேன். அதைத் தொடர்ந்து ஜூலை 8ல் எனக்கு மெமோ வழங்கப்பட்டது.என்னை பணியில் இருந்து, சஸ்பெண்ட் செய்து, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டார். என்னை சஸ்பெண்ட் செய்தது, அரசு பணியாளர்கள் நடத்தை விதிக்கு முரணானது.எனவே, இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, இயக்குனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் மற்றும் மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இயக்குனரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு, இடைக்கால தடையும் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்