தவறான விளம்பர விவகாரம்; தலைமை செயலர்களுக்கு சம்மன்
புதுடில்லி: சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவம் குறித்து தவறான தகவல்கள் அளிக்கும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில தலைமை செயலர்களுக்கு, உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.கொரோனா தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்கள் தவறான தகவல்களை தெரிவிப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.அப்படியிருக்கையில், டில்லி, ஆந்திரா, கோவா, குஜராத், ஜம்மு - காஷ்மீர் ஆகியவை, தவறான விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இந்த வழக்கில் அரசுத்தரப்புக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஷாதன் பராசத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.