கல்வி கட்டணம் தாமதம்: வட்டி வசூலிக்கும் பள்ளி
எலஹங்கா: பிரபல தனியார் பள்ளி, தாமதமாக கட்டணம் செலுத்தும் மாணவர்களின் பெற்றோரிடம், 3 சதவீதம் வட்டி வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெங்களூரு, எலஹங்காவின், சிங்கநாயகனஹள்ளியில் விப் கியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஐந்து தவணைகளில், கட்டணம் செலுத்த அனுமதி உள்ளது. ஆண்டுதோறும் பள்ளி துவங்கும் முன்பே, மார்ச் மாதம் இரண்டு கட்ட தவணை வசூலிக்கின்றனர். அதன்பின் ஜனவரிக்குள் மூன்று கட்டங்களாக கட்டணம் வசூலிக்கின்றனர்.சில மாணவர்களின் பெற்றோர், கடைசி தவணை செலுத்த தாமதமானதால், அவர்களிடம் பள்ளி நிர்வாகம் 3 சதவீதம் வட்டி வசூலித்தனர். இதை கண்டித்து பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளி முன்பாக குவிந்து போராட்டம் நடத்தினர். சில தொண்டு அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றன.தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர் சங்க ஒருங்கிணைப்பாளர் யோகானந்தா கூறியதாவது:தாமதமாக கட்டணம் வசூலிக்கும் பெற்றோரிடம், வட்டி வசூலிக்கின்றனர். இத்தகைய விதிமீறல், இந்த பள்ளியில் மட்டுமல்ல, பல்வேறு பள்ளிகளில் நடக்கிறது. பெரும்பாலான பள்ளிகள், கல்வியை தொழிலாக்கி கொண்டுள்ளனர்.மாநில அரசு இந்த விஷயத்தை, தீவிரமாக கருதி பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமாக கட்டணம் செலுத்துவோரிடம், வட்டி வசூலிக்கலாம் என, எந்த சட்டமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.