ஏழ்மை நிலையை போக்க படிப்புதான் சிறந்த வழி
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா, நேற்று கல்லூரி அரங்கத்தில் நடந்தது.இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் சக்திஸ்ரீ தலைமை வகித்து, கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.கே.ஜி.மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, பரிசுகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:வாழ்க்கையில் ஜெயிக்க, தவறு செய்யாமல் இருப்பதே முக்கியம். நமது பெற்றோர்களை மதிக்கவில்லை என்றால், நாம் நல்ல மனிதர்களாக வாழ முடியாது. ஆசிரியர்களை மதிக்காமல் வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேற முடியாது.மனிதன், 100 ஆண்டுகள் வாழ்வதற்கு, மூச்சுப் பயிற்சியும், ஒரு மாதத்திற்கு, 100 கி.மீ., ஓட்டமும், 100 சதவீதம் சந்தோஷமாக இருப்பதும் அவசியம். ஆண்கள், பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.ஏழ்மை நிலையை போக்க, படிப்பு ஒன்றுதான் சிறந்த வழி. வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு, சினிமா, மொபைல் போன் போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.மனதிற்குள் ஏற்படும் சோர்வை தவிர்த்து, உலகம் எனக்காக படைக்கப்பட்டது என்பதை யார் நினைக்கிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற முடியும். இவ்வாறு, டாக்டர் பக்தவத்சலம் பேசினார்.