தமிழ் வழி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு எப்போது?
திருப்பூர்: அரசு கல்லுாரிகளில், தமிழ் வழி பயின்றி மாணவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தாமதமின்றி வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழ்வழி கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு கல்லுாரி இளங்கலை படிப்புகளில், 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. அரசு கல்லுாரிகளில் வழக்கமான கவுன்சிலிங் நடைமுறை முடிந்த பின், கூடுதல் இடங்களுக்கு ஏற்ப, இந்த ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகிறது.நடப்பாண்டு கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம் இன்னமும் அறிவிப்பு வெளியாகவில்லை. மாநிலத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம், மே 7 முதல் வினியோகிக்கப்பட்டது.ஜூன், 2ல் கவுன்சிலிங் துவங்கியது; பொதுப்பிரிவு முதல் சுற்று கவுன்சிலிங் முடிந்த நிலையில், இரண்டாம், மூன்றாம் சுற்று கவுன்சிலிங் நடந்து வருகிறது.ஜூன், 30 முதல் கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செயல்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு கல்லுாரிகளில், 20 சதவீத கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நிர்வாக சிக்கல்கள்முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில், 20 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாவதால், மாணவ, மாணவியர் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் உருவாகிறது. அட்மிஷன் ஒதுக்கீடுசெய்வதில் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் நேரிடுகிறது.20 சதவீத கூடுதல் ஒதுக்கீடு தொடர்பாக, முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டால், பல மாணவர்களுக்கு, அரசு கல்லுாரியிலேயே சேரவாய்ப்பு கிடைக்கும்; பணிகளை முடிக்கவும் எளிதாக இருக்கும் என அரசு கல்லுாரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.