கல்வி உதவித்தொகை குறித்து மோசடி அழைப்பு: சி.இ.ஓ.,
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி, மாணவர்களின் பெற்றோருக்கு வரும், மோசடி போன் அழைப்புகளை நம்ப வேண்டாம் என தர்மபுரி சி.இ.ஓ., ஜோதி சந்திரா கூறினார்.தர்மபுரி மாவட்டத்தில், இரண்டு வாரங்களாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் போனிற்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்புகள் வருகின்றன.தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், மாணவர்களின் பெற்றோரிடம் வங்கி கணக்கு விபரங்களை கேட்டு, பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து எந்த அழைப்பும் வராது.ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, விளக்கங்கள் கேட்டு வருகிறோம். அதேபோல, பெற்றோர், எந்த தகவலாக இருந்தாலும், தலைமை ஆசிரியர் மூலம், மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். தேவையற்ற மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.