மாணவர்களுக்கு தேசபக்தியுடன் சுதேசி மனப்பான்மை; ஆசிரியர்களுக்கு அழைப்பு
புதுடில்லி: ''இன்றைய மாணவர்களை எதிர்கால தலைவர்களாக மாற்றும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள். நாட்டு நலனை கருதி, சுதேசி மனப்பான்மையுடன், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து, கலாசார வேர்களை கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஆசிரியர்களின் கடமை,'' என, டில்லி முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த ரேகா குப்தா கூறினார்.இன்று, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா டில்லியில் நேற்று நடந்தது. அதில் பேசிய முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சுதேசி மனப்பான்மை அவசியம். நாம் பயன்படுத்தும் பொருட்கள் எந்த நாட்டை சேர்ந்தவை. அதனால், அந்த நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.மாணவர்களை இயற்கையுடன் இணைந்த வகையில் மாற்ற வேண்டியது ஆசிரியர்களின் கடமை. குறிப்பாக, நீர் சேமிப்பு, மரங்களை தேவையில்லாமல் வெட்டுவதை தவிர்ப்பது, ஆறுகள் மற்றும் மலைகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்.டில்லி நகரை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி, அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறார். அவரின் கனவான, விக்சித் பாரத் என்ற, அனைத்து வசதிகளுடன் கூடிய உயர்ந்த நிலையை, 100வது சுதந்திர தின நாளில் நாம் அடைய வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். மாணவர்களுக்கு தேச பக்தியை ஊட்டும் வகையில் கல்வியில் மாற்றம் செய்ய வேண்டும்.இன்றைய மாணவர்களை எதிர்கால தலைவர்களாக மாற்றும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள். நாட்டு நலனை கருதி, சுதேசி மனப்பான்மையுடன், இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து, கலாசார வேர்களை கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஆசிரியர்களின் கடமைஇவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், டில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, புதுடில்லி எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், என்.டி.எம்.சி., துணைத் தலைவர் குல்ஜீத் சஹால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.