உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதித்தது ஏற்புடையதல்ல: ஐகோர்ட்

மதுரை: ''பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல,'' என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா, இந்தாண்டு ஆக.,13ம் தேதி நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி, பட்டச்சான்றுகளை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.அப்போது முனைவர் பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப், கவர்னர் ரவியிடம் பட்டம் பெறாமல், அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச்சான்றை காட்டி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அனைவரது முன்னிலையில் சபை நாகரிகம் இன்றி அவர் நடந்து கொண்ட இந்த சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.'கவர்னர் ரவி, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை' என்றும் ஜீன் ஜோசப் தெரிவித்தார். விசாரணையில், அவர் நாகர்கோவில் நகர திமுக துணை செயலாளர் ராஜன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது.இந்த சர்ச்சையை தொடர்ந்து, பல்கலை வேந்தரான கவர்னரிடம் பட்டம் பெற மறுத்து அவமதித்த மாணவி ஜீன்ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, 'மாணவி இவ்வாறு நடந்தது ஏற்புடையதல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க பல்கலை சட்டத்தில் வழிவகை உள்ளதா' என்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்