சூழலியல் பணிக்கு அங்கீகாரம்: வெற்றி அறக்கட்டளைக்கு விருது
திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கலந்த சூழலியல், கல்வி மற்றும் இயற்கை வேளாண்மை என, மனித வாழ்வியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்கும் அறப்பணியில் சாதனை படைத்து வருகிறது, வெற்றி அறக்கட்டளை.திருப்பூர் மாநகராட்சி, மங்கலம் ரோடு பகுதியில், 12 கி.மீ., துாரம், ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆண்டிபாளையம் குளத்தை புனரமைத்து, நீர்வழித்தடங்களை மீட்டெடுத்து, மக்கள் கரசேவையுடன் துார்வாரி கரைகளை பலப்படுத்தி, 15 ஆண்டுகளாக குளத்தில் தண்ணீர் வற்றாமல் தேங்கி இருக்க செய்துள்ளது.இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, எட்டு ஏக்கர் நிலத்தில், புதிய வகுப்பறைகளுடன் பள்ளி வளாகம் அமைத்து கொடுக்கப்பட்டது. இன்று, 3,600 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்து பள்ளி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் கனவு கண்டபடி, அவரது நினைவு நாளில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம் துவக்கப்பட்டது. வெற்றி அறக்கட்டளை மற்றும் இளம் பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, 11 ஆண்டுகளில், 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளன.இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான, 12 ஏக்கர் நிலத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநகராட்சி அறிவியல் பூங்கா, மூங்கில் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, பயிலரங்கம், உடற்பயிற்சி கூடம் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்க, அறப்பொருள் வேளாணகம் என்ற இயற்கை விவசாய பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனம் வழங்கிய, பொக்லைன் இயந்திரம் மூலமாக, மதுரை மாவட்டத்தில், ஒன்பது மாதங்களாக, 17 குளம், குட்டைகள் துார்வார பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.இத்தகைய பசுமை சார், அறப்பணிகளை செய்து வரும் வெற்றி அறக்கட்டளைக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.சென்னை, திருப்போரூரில் நடந்த மாமல்லன் அணைக்கட்டு அடிக்கல்நாட்டு விழாவில், சூழலியல் பணிகளுக்கான விருது வெற்றி அமைப்புக்கு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து, 'வெற்றி' அமைப்பின் அறங்காவலர் குமார் து ரைசாமி, விருதை பெற்றுக்கொண்டார்.'வெற்றி' அமைப்பினர் கூறுகையில், 'கடந்த, 25 ஆண்டுகளாக சூழலியல் பணிகளுக்கு, தமிழக முதல்வரிடம் இருந்து விருது பெற்றது, சிறப்பான அங்கீகாரம். தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலை பாதுகாக்கும் பணிகளை முன்னெடுப்போம்.வாழத்தகுந்த பூமியை வரும் தலைமுறைக்கு செழிப்பான பூமியாக வழங்கி செல்வோம். தொடர்ந்து சூழலியல் பணிகளை தொடர்வோம்,' என்றனர்.