தரமற்ற உணவு வழங்குவதை எதிர்த்து மாணவியர் போராட்டம்
பொன்னேரி: பொன்னேரியில் அரசு மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதை கண்டித்து, மாணவியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொன்னேரியில், தமிழக அரசின் சமூக நீதி கல்லுாரி மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. இதில், 40 மாணவியர் தங்கி, கல்லுாரி படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.அரசு விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு இருப்பதுடன், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக தெரிவித்து, விடுதி முன் மாணவியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற உணவு வழங்கப்படுவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தனர்.இது குறித்து, மாணவியர் கூறுகையில், 'புகார் தெரிவிக்கும் மாணவியரின் நடத்தையை கொச்சைப்படுத்தி, பெற்றோரிடம் புகார் தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்ட மாணவியரை விடுதியில் இருந்து வெளியேறும்படி வார்டன் தெரிவிக்கிறார்' என, மாணவியர் குற்றஞ்சாட்டினர்.தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார், மாணவியரை சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்படி, மாணவியர் போராட்டத்தை கைவிட்டு விடுதிக்குள் சென்றனர்.