தேர்வெழுத அனுமதி மறுப்பு; கல்லுாரி மாணவியர் மறியல்
அம்பத்துார்: 'கல்லுாரி கட்டணத்தை செலுத்தினால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம்' என கூறியதாக, விளையாட்டு கோட்டாவில் தேர்வான மாணவியர் மறியலில் ஈடுபட்டனர்.அம்பத்துார், மேனாம்பேடில் அன்னை வயலட் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, விளையாட்டு கோட்டவில் சில மாணவியர் சேர்ந்துள்ளனர். அவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தி, பயின்று வந்துள்ளனர்.இந்நிலையில், தற்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், விளையாட்டு கோட்டாவில் தேர்வான ஒன்பது மாணவியர், இறுதியாண்டு கல்லுாரி கட்டணத்தை முழுதுமாக செலுத்தினால் தான், தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என, கல்லுாரி நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.ஆத்திரமடைந்த ஒன்பது மாணவியரும், தங்களது நண்பர்களுடன் நேற்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடந்து அங்கு வந்த புதூர் போலீசார், மாணவியரிடம் பேச்சு நடத்தினர்.தேர்வு எழுத அனுமதிப்பதாக கல்லுாரி நிர்வாகம் கூறியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.