உள்ளூர் செய்திகள்

பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளை கைவிடுகின்றன சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

புதிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மும்மொழி கொள்கையால், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை, கைவிடும் நிலைக்கு சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில், மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இரண்டு இந்திய மொழிகள் மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிக்க வேண்டும். அதிலும், எட்டாம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது பிராந்திய மொழி கட்டாயம். அத்துடன், ஒரு இந்திய மொழியை கற்கலாம்.வெளிநாட்டு மொழி ஒன்றை மட்டும் கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், பெரும்பாலான பள்ளிகள் ஆங்கிலத்தை தேர்வு செய்து, மற்ற வெளிநாட்டு மொழிகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.அதே நேரத்தில், தமிழக அரசு, இருமொழி கொள்கையின்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளதாலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதாலும், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டும், இதை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.இது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகிகள் கூறியதாவது: மும்மொழி கொள்கையின்படி, தாய்மொழி அல்லது பிராந்திய மொழி என்றால், ஹிந்தி பேசாத தென் மாநிலங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுடன், இன்னொரு இந்திய மொழியாக ஹிந்தியை கற்பிக்கலாம். அதே சமயம், ஒரே ஒரு வெளிநாட்டு மொழியை கற்பிப்பது என்றால், ஆங்கிலத்தை மட்டும் தான் கற்பிக்க முடியும்.ஏற்கனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி வழங்கப்படுகிறது. அதனால், அது முதன்மை மொழியாக இருந்தது. விருப்ப மொழியாக ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்ச், மான்டரின் உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்பட்டன. அதற்காக, அந்த மொழி ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்தி உள்ளோம்.அந்த பாடங்கள், மதிப்பெண் பட்டியலில் இடம் பெறுவதால், பெற்றோரிடம் அதற்கான கட்டணத்தையும் வசூலிக்க முடிந்தது. ஆனால், இனி ஆங்கிலம் மட்டுமே, மதிப்பெண் பட்டியலில் இடம் பெறும் என்பதால், பெற்றோரிடம் பிற மொழிகளை கற்பிக்க, கட்டணம் வசூலிக்க முடியாது. இதனால், அந்த ஆசிரியர்கள் பணி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும்.ஒருவேளை அந்த மொழிகளை கற்க, மாணவர்கள் ஆர்வம் காட்டினால், அவர்களுக்கு பள்ளிப் பாட வேளையில் பாடம் நடத்த இயலாது. அதற்கு பதிலாக, பள்ளி முடிந்த பின், தனிப்பயிற்சியாக மாலையில் தான் நடத்த முடியும். அது, பாடச்சுமையை ஏற்படுத்தும்.இது ஒருபுறம் இருக்க, என்.சி.இ.ஆர்.டி., ஹிந்தி வழியில், அனைத்து பாடங்களையும் உருவாக்கி உள்ளதுடன், சமஸ்கிருத மொழிப்பாட புத்தகங்களையும் உருவாக்கி உள்ளது. இது, வடமாநிலங்களில், ஹிந்தி வழி கல்வியை ஊக்குவித்து, ஆங்கிலத்தை வெளிநாட்டு மொழிப்பாடமாக மட்டுமே மாற்றுவதாக உள்ளது.அதனால், மும்மொழி கொள்கையை செயலாக்க, மத்திய கல்வி அமைச்சகம் அவசரம் காட்டுவதாகவே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்