வருவாய்க்கு வழிகாட்டும் வாய்ப்பு; திறமைக்கு அச்சாரமிடும் பயிற்சி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தேன், மூலிகை, உயிர்க்கரி உள்ளிட்டவற்றில் இருந்து பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கிராமப்புற பெண்கள் பயன் பெற்று, தொழில்முனைவோராக மாறி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரியில், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவில், அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, தேன் நெல்லி, குல்கந்து போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு, லிப் பாம், பேஸ் பேக், மாய்ஸ்சரைசர் உட்பட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, தொழில்நுட்ப முறைகளான தேன் பதப்படுத்துதல் மற்றும் நீண்ட நாள் கெடாமல் வைப்பதற்கான சேமிப்பு முறைகள் குறித்தும், தரச்சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள், பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் இ-காமர்ஸ் விற்பனை முறை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தொழில் துவங்கும் வழிமுறை மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பாக பயிற்சியும், செயல்விளக்கமும் அளிக்கப்படுகின்றன.பயிற்சிகளில், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள் கலந்து கொள்கின்றனர். பயிற்சி பெற்ற பெண்கள் பலர் தொழில்முனைவோராக உருவாகியுள்ளனர்.வனக்கல்லுாரி வணிக மேம்பாட்டு காப்பக முதன்மை செயல் அதிகாரி கவிதா கூறியதாவது:எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் வைத்து, அதை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கிறோம். வனக்கல்லுாரி வாயிலாக சான்றிதழ் வழங்கப்படுவதால், அவர்கள் தொழில்முனைவராக மாற, வங்கிகளில் கடனும் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. பயிற்சி பெற்ற பலர் தொழில்முனைவோராக மாறியுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பெண்கள் தொழில் முனைவோராக உருவாகுவதால், கிராமப்புற பொருளாதாரம் மேம்படுகிறது. அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.வனக்கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில், “இயற்கையான முறையில் உருவாகும் அழகு சாதனப் பொருட்கள் உட்பட தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தரம், நம்பகத்தன்மை, சான்றிதழ், அழகான பேக்கிங், சரியான விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய அனைத்தும் இணைந்தால், அந்த தயாரிப்பு சந்தையில் நிலைத்து நிற்கும். அதற்கான பயிற்சி அளிக் கப்பட்டு, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம்,” என்றார்.