போட்டித்தேர்வில் வெற்றி பெற திட்டமிடல் மிகவும் அவசியம்
சேலம்: தமிழக வேளாண் பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், கிராமப்புற வேளாண் பணி அனுபவம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி,சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் இளம் பகவத், போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படை தகுதிகளான கல்வி, வயது, தேர்வு நிலை, எவ்வாறு தேர்வு நடத்தப்படும், எவ்வளவு மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்பதோடு, அரசு சார்பில் போட்டித் தேர்வுக்கு வழங்கும் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார்.மேலும் வெற்றி பெற திட்டமிடல் மிகவும் அவசியம் என அறிவுறுத்தினார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷாலினி (பொது), உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் மஞ்சுளா, நேர்முக உதவியாளர் கமலம் (வேளாண்) உள்ளிட்ட அலுவலர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.