உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.எம். மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஆனால் மனிதவளத் துறை மற்றும் 11 ஐ.ஐ.எம் -களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது நாட்டில் 11 ஐ.ஐ.எம் -கள் இயங்கி வருகின்றன. அவற்றின் மாணவர் சேர்க்கை பொதுவாக கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து நடந்தாலும், ஒவ்வொரு ஐ.ஐ.எம். அட்மிஷன் கமிட்டியும் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. இதனால் ஐ.ஐ.எம் -களில் சேர்வதற்கு விருப்பம் கொண்ட மாணவர்கள் குழப்பம் அடைகிறார்கள். எனவே ஐ.ஐ.எம். சேர்க்கை நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தனர். அதில் அவர்கள், ஐ.ஐ.எம் -களின் சேர்க்கை நடைமுறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டும், குழப்பமாகவும் உள்ளன. சிலர் கேட் தேர்வில் 99% மதிப்பெண்கள் எடுத்திருந்தும் அவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரவில்லை. சில ஐ.ஐ.எம் -கள் பள்ளி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுக்கின்றன. எனவே இவற்றில் ஒரு பொதுவான வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அதன்பொருட்டு இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் 2010 கேட் தேர்வை நிறுத்தி வைப்பதோடு, ஐ.ஐ.எம் -களின் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தங்களின் மனுவில் கோரியிருந்தனர். ஆனால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், மனிதவளத் துறை மற்றும் நாட்டின் 11 ஐ.ஐ.எம் -கள் ஆகியவற்றிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதற்கான பதிலை வரும் ஏப்ரல் 18 ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியிருக்கும் நீதிமன்றம், அந்த தேதியிலேயே அடுத்தகட்ட விசாரணையையும் நடத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்