உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள்?

தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் தலா 100 இடங்களை அதிகரிப்பதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சிலிடம்(எம்.சி.ஐ) கோரியுள்ளது. அனுமதி கிடைத்தால், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். எண்ணிக்கை தலா 250 என்ற அளவில் அதிகரிக்கும். எம்.சி.ஐ. குழுவானது சென்னை மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே ஆய்வை முடித்து விட்டது. ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும் விரைவில் ஆய்வை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகங்கையில் ஒரு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அனுமதியை கேட்கவும் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 1945 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. மேலும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சில தனியார் மருத்துவ கல்லூரிகளிடமிருந்து சில இடங்களை மாநில சுகாதாரத் துறை இழக்கலாம். அந்த கல்லூரிகள் ஒவ்வொரு வருடமும் தேர்வு கமிட்டியினால் நடத்தப்படும் கவுன்சிலிங்கின் மூலம் 60% இடங்களை பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சில தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒற்றை சாளர முறையில் இடங்களை பகிர்ந்து கொள்வதில்லை. எம்.சி.ஐ. விதிகளின்படி சேர்க்கை நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை, இடங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மாநில அரசு தங்களை வலியுறுத்த முடியாது என்றும் அவை தெரிவிக்கின்றன. இதனால் ஒரு புதிய தவறான போக்கு ஏற்பட்டுவிடுமோ என்று மாநில சுகாதாரத்துறை அஞ்சுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்