தேர்வு முடிவுகள் வெளியிடாத திருச்சி அண்ணா பல்கலை
இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டு மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 15 க்குள் வெளியிட வேண்டும். ஆனால் மார்ச் 15 க்கு பிறகும், இன்னும் முடிவுகள் வெளியிடவில்லை. இந்நிலையில், அடுத்த செமஸ்டருக்கான தேதி (ஏப்., 18) அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தெரியாமல் மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர். ஏதாவது ஒன்றிரண்டு பாடங்களில் தோற்றிருந்தால் கூட, தேர்வு முடிவு வெளிவந்த உடனேயே அப்பாடங்களை மீண்டும் படித்து, இந்த செமஸ்டருக்கு சேர்த்து எழுத முடியும். ஆனால் பாடங்கள் தேர்ச்சியா, தோல்வியா என தெரியாததால், மாணவர்கள் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. நான்காம் ஆண்டு மாணவர்கள், ஐந்தாவது செமஸ்டர் வரையான தேர்வு முடிவுகளைக் கொண்டு, வளாக நேர்முகத் தேர்வு, பிற கல்லூரிகளில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். ஆனால், செமஸ்டர் முடிவுகள் கையில் இல்லாததால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மற்ற பல்கலைகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் தேர்வெழுதிய ஒருமாதத்திற்குள்ளாகவே முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.