புகழ்பெற்ற கல்லூரிகள் பட்டங்களை இனி சுயமாக வழங்கும்?
மத்திய மனிதவள அமைச்சகம் இந்த புதிய நடைமுறையை ஏற்படுத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறது. தங்களுடைய மாணவர்களுக்கு தாங்களே பட்டங்களை வழங்குவதன் மூலம், அந்த கல்வி நிறுவனங்கள் தாங்கள் இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை. அதேசமயம் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள், அவைகளின் வயது, வழங்கும் கல்வியின் தரம், மாணவர்களின் செயல்பாடு மற்றும் தொடர்புடைய மற்ற அளவீடுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். மனிதவள அமைச்சகத்தின் இந்த புதிய முடிவினால் பயன்பெறும் கல்லூரிகளில் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரி ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த கல்லூரிகளுக்கு சொந்த பட்டங்களை வழங்கும் விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகாரம் வழங்கப்படும். கல்லூரிகளுக்கு இளநிலை பட்டங்கள் வழங்கும் அதிகாரமும், ஆராய்ச்சி மையங்களுக்கு முதுநிலை பட்டங்கள் வழங்கும் அதிகாரமும் வழங்கப்படும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், அந்த குறிப்பிட்ட கல்லூரிகளும், ஆராய்ச்சி மையங்களும், தங்களது தேர்வுகளை தாங்களே சொந்தமாக நடத்திக்கொள்ளும் அதிகாரத்தைப் பெறும். தற்போது நாடாளுமன்றம் அல்லது மாநில அரசின் சட்டங்களின் மூலம்தான் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் யு.ஜி.சி. சட்டத்தின் மூலமாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்படும் கல்வி நிலையங்கள் தங்களின் பட்டங்களை தாங்களே வழங்க அனுமதிக்கப்படுகின்றன. எனவே மனிதவள அமைச்சகத்தின் இந்த புதிய திட்டம் அமலானால், யு.ஜி.சி. சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். மேலும் இது தொடர்பாக புதிய சட்டம் இயற்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் உருவாகும். நாட்டின் முக்கிய மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளுக்கு இந்த புதிய அதிகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று புகழ்பெற்ற கல்வியாளர் என்.ஆர். மாதவ மேனன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் சில மாநிலங்கள் ஏற்கனவே சில கல்லூரிகளுக்கு தானாக பட்டங்களை வழங்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளன. மும்பையின் புனித சேவியர் கல்லூரி அதற்கு ஒரு உதாரணம். மேலும், புகழ்பெற்ற கல்லூரிகளுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் தவிர இன்னும் பல முக்கிய அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்றும் சில தரப்பிலிருந்து குரல்கள் எழுந்துள்ளன.