சர்வதேச அளவில் இந்திய மாலுமிகளுக்கு அதிக வரவேற்பு
"தினமலர்" நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும் வழிகாட்டி 2011 நிகழ்ச்சி, அவிநாசி ரோட்டிலுள்ள கொடீசியா வர்த்தக வளாகத்தில் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை முதலே மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூட்டம் அலைமோதியது. கருத்தரங்கில், "கடல்சார் படிப்புகளைப் படித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்" என்ற தலைப்பில், இத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற நிபுணர் நரசய்யா பேசியதாவது: கடல்சார் படிப்புகளில் சேர, செயல்திறன் மற்றும் பொது அறிவுடன் நல்ல உடற்தகுதியும் அவசியம். இத்தகைய படிப்புகளில் சேர தகுதி பெறும் மாணவ, மாணவியர் நான்கு ஆண்டுகள் படிக்கும் வகையில் பல்வேறு படிப்புகள் உள்ளன. இவற்றில் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். கடல்சார் படிப்பு முடித்து பணியில் சேரும் மாணவ, மாணவியர் கப்பல் பணியில் துவக்கத்தில் ஜூனியர் இன்ஜினியராக சேரும் வாய்ப்பு பெறுவார்கள். பல ஆண்டு காலம் அனுபவம் பெற்ற பின், படிப்படியாக முன்னேறி தலைமை இன்ஜினியர் பதவி வகிக்கும் வாய்ப்பு பெறுவர். கடல்சார் படிப்புகளுக்கு மொத்தம் நான்கு அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதை தவிர தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகம் தற்போது செயல்பட்டு வருகின்றன. மதுரை-அருப்புக்கோட்டை ரோட்டில் செயல்படும் ஆர்.எல்.,இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்சஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பலர், சர்வதேச நாடுகளில் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கடல்சார் வணிகத்துக்கு தகுதி மற்றும் திறமைவாய்ந்த இந்திய மாலுமிகளையே, அனைத்து நாட்டினரும் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். வரும் 2015ல் மெரைன் அதிகாரிகளின் தேவை, தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு அதிகரிக்கும். கடல்சார் படிப்பு முடித்து குறைந்தது, 10 முதல் 12 ஆண்டுகள், கப்பலில் பணியாற்ற வேண்டும். அனுபவம் பெற்ற பின், கப்பல் பணியை விட்டு வெளியே வரும் மாணவ, மாணவியருக்கு கடல்சார் கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணி உள்பட பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் மாணவியர் சேர்க்கை குறித்து, பலருக்கு சந்தேகங்கள் உள்ளன. மாணவர்களை போலவே, மாணவியரும் இத்துறையில் கல்வி கற்று பணியில் சேர நல்ல வாய்ப்பு உள்ளது. அமெரிக்க கப்பலில் 800 மாலுமிகளுக்கு கேப்டனாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷெட்டி என்ற பெண் பணியாற்றுகிறார். இத்துறையில் மாணவியர் சேர்ந்து, கல்வி கற்று சாதிக்க இவர் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். கடல்சார் வணிகம் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் மட்டுமல்ல சிறந்த போக்குவரத்தும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, நரசய்யா பேசினார்.