தமிழக திறன்மிகு மையத்துக்கு மத்திய அரசு ரூ.19 கோடி உதவி
சென்னை: தமிழக அரசின் மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை நவீனமயமாக்குவதற்கு, 19 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதியளித்து உள்ளது.நம் நாட்டில், மருத்துவ சாதனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், 350 ஏக்கரில் மருத்துவ சாதனங்களுக்கான தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.எனவே, மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை, 3டி தொழில்நுட்பத்தில் தங்களின் தயாரிப்பை தயாரிக்கவும், தரத்தை பரிசோதிக்கவும் உதவும் வகையில், மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை மேலும் நவீனமயமாக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, தற்போது இருப்பதை விட கூடுதல் வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் கூடிய மையம், ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க, மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தின் பங்குதாரர்கள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் மையத்தை நவீனமயமாக்க, டிட்கோ தரப்பில் கேட்கபட்ட, 19 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க பரிசீலனை செய்வதாக, மத்திய மருந்து துறை இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.