ஊதிய உயர்வு வழங்க கோரி 19ல் ஆசிரியர்கள் போராட்டம்
வால்பாறை: ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, வரும், 19ம் தேதி அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வால்பாறையில், 5 அரசு மேல்நிலைப்பள்ளி, 4 அரசு உயர்நிலைப்பள்ளி, 14 நடுநிலைப்பள்ளிகள், 71 துவக்கப்பள்ளிகள் உள்ளன. இதில், 18 அரசு நிதியுதவி பெறும் துவக்கபள்ளிகள், 3 அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகள் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.இந்நிலையில், கருமலை எஸ்டேட் பகுதியில் செயல்படும் துவக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில், மொத்தம், 25 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் மூன்று ஆசிரியர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் வழங்கப்பட வேண்டிய ஊதிய ஊயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.இது குறித்து, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொருளாளர் கோவேந்த அய்யனார், வால்பாறை வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கருமலை (பி.கே.டி.,) பகுதியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் மூன்று ஆசிரியர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் வழங்கப்படும் ஊதிய ஊயர்வு வழங்கப்படவில்லை. பள்ளி ஆசிரியர்களிடம் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும், பள்ளி குழு செயலரை கண்டித்து, வரும், 19ம் தேதி வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாகவும், 20ம் தேதி கருமலை எஸ்டேட் அலுவலகத்தின் முன்பும், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.