பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் மழையில் நனைந்த 2,000 புத்தகங்கள்
சென்னை: பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி, 2016ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது, சமுதாய நலக்கூடத்தில் செயல்பட்டது. கல்லுாரி சாலையில், 2019ம் ஆண்டு கட்டிய புதிய கட்டடத்தில் கல்லுாரி மாறியது. மிக்ஜாம் புயலில், கல்லுாரியில் 4 அடி வரை வெள்ளம் புகுந்தது. இதில், 21 கணினிகள், மரப்பொருட்கள், 2,000த்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வகையில், 50 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் சேதமடைந்தன.வெள்ளத்தில் நனைந்த புத்தகங்கள், வெயிலில் தினமும் காய வைக்கப்படுகிறது. கட்டடத்தில், 25க்கும் மேற்பட்ட பாம்புகள் புகுந்தன. அவை, மழை நின்றபின் விரட்டிவிடப்பட்டன. கட்டடத்தில் விரிசல் விழுந்துள்ளதால், அலுவலகம், 10க்கும் மேற்பட்ட வகுப்பறைகளில் 2020ம் ஆண்டு முதல் மழைநீர் கசிகிறது.கட்டடத்தில், ஐந்து ஆண்டுக்குள் சேதம் ஏற்பட்டால், கட்டுமான நிறுவனம் சீரமைக்க வேண்டும். இந்த வகையில், விரிசல் விழுந்த பகுதி மற்றும் மேல்தளத்தில், அதே கட்டுமான நிறுவனம் சீரமைத்து கொடுக்கிறது.அதேபோல், இதே கல்லுாரி சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி, ஐ.டி.ஐ., மற்றும் பணிமனை உள்ளது. இவ்விடங்களிலும், வெள்ளம் புகுந்தது. பள்ளியில் சில ஆயிரம் ரூபாயும், ஐ.டி.ஐ.,யில் பல லட்சம் ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.பணிமனையில், 80 பேருந்துகள் உள்ளன. வெள்ளம் புகுந்ததால், அனைத்து பேருந்துகளும், கல்லுாரி சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால், இன்ஜின் சேதத்தில் இருந்து பேருந்துகள் தப்பின.