ஜாக்டோ ஜியோவின் அடுத்த போராட்ட அறிவிப்பு; ஏப்.22ல் பேரணி, மே 25ல் மாநாடு
மதுரை: அரசு ஊழியர், ஆசிரியர்கள் அமைப்பினர் பல்வேறு சங்கங்கள் அமைத்து தங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். அதேசமயம் பொதுவான கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டம் ரத்து, அகவிலைப்படி, சரண்டர் விடுப்புக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு பொது அம்சங்களுக்கு போராட கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ ஜியோ) உருவாக்கப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக இவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த தீவிரம்காட்டி வருகின்றனர். இதற்காக பலமுயற்சிகளை மேற்கொண்டும் நிறைவேறவில்லை.கடந்த ஜனவரியில் இக்குழுவினர் 4 கட்ட போராட்டங்களை நடத்த முடிவெடுத்தனர். இதில் ஒருபகுதியாக பிப்.,25ல் மறியல் நடத்த இருந்த சூழலில் 4 அமைச்சர்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்து நான்கு வாரம் அரசு அவகாசம் கேட்டது. அதனால் ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு, ஆர்ப்பாட்டமாக நடந்தது.பின்னர் மார்ச் 13 ல் மீண்டும் ஜாக்டோ ஜியோவை அழைத்த அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. தொடர்ந்து பட்ஜெட்டிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து மார்ச் 23ல் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இப்படி போராட்டங்கள் நடந்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் சமீபத்தில்சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் கூடி ஆலோசித்து புதிய போராட்டங்களை அறிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளிலும் 30 சதவீத்திற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகரன், குணசேகரன், முருகையன், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் அடுத்த கட்டமாக ஏப்.,22 ல் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்துவது என்றும், மே 24 ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.