வடலூர் ஆசிரியர் பயிற்சி : ஜுன் 3-ந்தேதி கடைசி நாள்
வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பில் 2011-12-ம் ஆண்டு மாணவர் சோக்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. பட்டயபடிப்பில் மாணவர்கள் சேர ஜுன் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்காக தமிழகம் முழுவதும் உள்ள 30 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த 18-ந்தேதி தொடங்கியது. அதன்படி வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதன் முதல்வர் முனைவர் சுப்பிரமணியபிள்ளை ஆசிரியர் பட்டயபடிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பட்டயப்படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்களை பெற விரும்புவோர் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500-க்கும், தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பினர் ரூ.250-க்கும் பெறப்பட்ட வரைவோலையை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு மேல் மாலை 5.45 மணிக்குள் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை வருகிற ஜுன் 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து வடலூர் மாவட்டக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மேலும் தேவையான விவரங்களை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் சுப்பிரமணியபிள்ளை தெரிவித்தார்.