உள்ளூர் செய்திகள்

அசுர வேகத்தில் அங்கீகாரம் ஒரே நாளில் 3 கல்லுாரிகளில் ஆய்வு

சென்னை: தமிழ்நாடு சட்ட பல்கலை, தனியார் சட்டக்கல்லுாரிகளுக்கு, அசுர வேகத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு கல்லுாரிகளில் ஆய்வு நடத்தியதாக கூறப்படுவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில், தனியார் சட்டக்கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்க, கல்லுாரிகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இக்குழு 10 தனியார் கல்லுாரிகளில் ஆய்வு நடத்தியது.குழு அளித்த அறிக்கை அடிப்படையில், பல்கலை அங்கீகாரம் வழங்கியது. குழு ஒரே நாளில், மூன்று அல்லது நான்கு கல்லுாரிகளில் ஆய்வு நடத்தியதும், பல்கலை நிர்வாகம் அசுர வேகத்தில் அங்கீகாரம் வழங்கியதும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளன.தகவல் இது குறித்து, அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை, தனியார் சட்டக்கல்லுாரிகளில் முறையாக ஆய்வு நடத்துவதில்லை. இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில விபரங்கள் பெறப்பட்டன. அதில், தனியார் கல்லுாரிகள், அங்கீகார ஆய்வு விவகாரத்தில், மோசடி நடந்ததற்கான முகாந்திரங்கள் உள்ளன.கடந்த ஆண்டு ஜன., 30, 31, பிப்., 1 ஆகிய தேதிகளில், ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது. ஆய்வுக்குழு மூன்று நாட்களில் 1,200 கி.மீ., பயணித்து, 10 தனியார் சட்டக் கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி யதாக, தகவல் அளித்துஉள்ளனர்.பல்கலை சட்டப்படி, ஒவ்வொரு கல்லுாரியையும் ஆய்வு செய்ய, ஒரு நாள் முழுதும் தேவை. ஆனால், ஒரே நாளில் 3 முதல் 4 தனியார் சட்டக்கல்லுாரிகளை ஆய்வு செய்துள்ளனர்.பத்து கல்லுாரிகளுக்கு இடையிலான துாரம் மற்றும் பயணத்தை கழித்து, ஒரு கல்லுாரியின் ஆய்வு நேரத்தை கணக்கிட்டால், சராசரியாக 7 நிமிடங்களுக்கு, ஒரு கல்லுாரியில் ஆய்வு நடந்திருக்கிறது.இது எப்படி சாத்தியம்? இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டோர் விபரம், குழு பயணச் செலவு விபரம் கேட்டதற்கு, தகவல் வழங்கவில்லை. இதை மறைப்பது, ஆய்வு குழுவின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.எனவே, 10 தனியார் சட்ட கல்லுாரிகளை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். மோசடியில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, விரிவான விசாரணை நடத்த கோரி, கவர்னர் ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு, அறப்போர் இயக்கம் சார்பில், புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்