இன்ஜினியரிங் சீட் பெற இறுதி வாய்ப்பு: ஆக.,30ல் சிறப்பு கவுன்சிலிங்
ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடந்து முடிந்த பொது இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று இடங்களை தேர்வு செய்துவிட்டனர். கடந்த ஆண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு புதியதாக 70க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட்ட நிலையில், 7 ஆயிரத்து 537 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. கடந்த ஆண்டு நிலையை வைத்து, இந்த ஆண்டு 10 ஆயிரம் இடங்கள், 20 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று ஆளாளுக்கு கருத்து தெரிவித்தனர். ஆனால், அவை பொய்யாக்கப்பட்டு விட்டது. இது இன்றைய மாணவ, மாணவியர் மத்தியில் இன்ஜினியரிங் படிப்பு மீதான ஆர்வத்தையே காட்டுகிறது. இந்நிலையில், தற்போது காலியாக உள்ள இடங்களையும் மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதி சென்னை அண்ணா பல்கலையில் நடக்கும் சிறப்பு கவுன்சிலிங்கில் இதுவரை விண்ணப்பிக்காத, விண்ணப்பித்து அழைக்கப்படாத மாணவர்களும் கலந்து கொள்ளலாம். இதுவரை நடந்த 5 கட்ட கவுன்சிலிங்கிலும் அழைக்கப்படாத தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் இந்த கவுன்சிலிங் அமைகிறது. இந்த சிறப்பு கவுன்சிலிங்கில், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக சென்று, காலியாக உள்ள இன்ஜினியரிங் இடங்களில் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விவரங்கள் http://www.annauniv.edu/tnea2008/specialtam.pdf என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் சீட் பெறுவது மட்டுமே கனவாக இருக்க கூடாது. எடுத்த படிப்பை சிறப்பாக படிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்பதை மாணவ, மாணவியர் நினைவில் கொள்ள வேண்டும்.