உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் புத்தக திருவிழா இன்று துவக்கம் பிப்.6 வரை நடக்கிறது

சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி துவக்க விழா நடைபெறுகிறது.கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அமைச்சர் பெரியகருப்பன் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.இங்கு அமைக்கப்பட்ட 120 ஸ்டால்களில் இலக்கியம், கட்டுரை, போட்டி தேர்வு, மருத்துவம், இன்ஜி., கல்விக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். புத்தகத்தின் விலைக்கு ஏற்ப தள்ளுபடியும் விற்பனையாளர் சார்பில் வழங்கப்படும். இது தவிர, மாலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கவிஞர், தமிழறிஞர்கள், பட்டிமன்ற நடுவர்களின் சொற்பொழிவு நடைபெறும். மேலும் கீழடியின் வரலாறு, செய்தித்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, அறிவியல் சார்ந்த பொருட்களின் கண்காட்சி, போக்குவரத்து துறை சார்பில் சாலை விழிப்புணர்வு வாகன கண்காட்சி இடம் பெறுகிறது.கண்காட்சியை முன்னிட்டு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது. அறிவு களஞ்சியத்தை புத்தக வடிவில் அள்ளிச்செல்ல அனைவரும் வாருங்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை கலெக்டர் பி.ஏ., (வளர்ச்சி) வீரராகவன் தலைமையில் கண்காணிப்பாளர் திருப்பதி உட்பட அனைத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்